புதுடில்லி:புதுடில்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், பஞ்சாப் மாநிலத்தின் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி அரசு கடந்த ஆண்டு அறிவித்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்தக் கொள்கைகளை ரத்து செய்த துணை நிலை கவர்னர் சக்சேனா, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த முறைகேட்டில் நடந்த பணமோசடி குறித்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், பணமோசடி தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தின் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் மது வியாபாரியுமான தீப் மல்ஹோத்ரா மகனான, தொழிலதிபர் கவுதம் மல்ஹோத்ராவை அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் கவுதம் மல்ஹோத்ரா விசாரணை முடிந்த பின், புதுடில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். பின், மேலும் சில நாட்கள் அவரிடம் விசாரிக்க, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மல்ஹோத்ரா மது உற்பத்தி செய்து, பஞ்சாப், டில்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வினியோகம் செய்து வருகிறார். பஞ்சாபின் பரித்கோட் உட்பட கவுதமுக்கு தொடர்புடைய பல இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த ஆண்டு அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத் துறை இதுவரை இந்த வழக்கில் ஏழு பேரை கைது செய்து, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் ஆடிட்டரும் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.