உடுமலை : தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள், 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற் பயிற்சி மையத்தில் பயின்று சான்று பெற்றோர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்.
அரசு தேர்வுகள் இயக்கத்தால், கடந்த 2022, ஆக., மாதம் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று, தொழிற்பயிற்சி நிலைய சான்று பெற்றோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்களை, www.skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்தில் பார்வையிடலாம்.
திருப்பூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள், திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.