வால்பாறை : பழங்குடியின மாணவர்கள் உண்டு உறைவிடப்பள்ளியில், காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
வால்பாறை எம்.ஜி.ஆர்., நகரில் அமைந்துள்ள நோதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில், பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியை கோவை நேசம் டிரஸ்ட் நிர்வகிக்கிறது.
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, பள்ளியில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. படிப்பில் மட்டுமல்லாது, பிற துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுற்றிலும் காய்கறி தோட்டம் அமைத்து, தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக, கேரட், பீன்ஸ், தக்காளி, கத்தரிக்காய், வாழை உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள், கீரைகள் பயிரிப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
கோவை நேசம் டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:
பழங்குடியின மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப பாடம் நடத்தப்படுகிறது. மேலும், மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து, அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர்.
மாணவர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் நிலையில், பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு விழாவிலும், சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இயற்கை உணவு தான் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை மாணவர்கள் உணரும் வகையில், பள்ளி வளாகத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, மாலை நேரத்தில் காய்கறி தோட்டங்களை பராமரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு, கூறினார்.