உடுமலை : தேசிய திரைப்பட விருதுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் திரைப்படமான 'மல்லி' படத்தை, மாணவர்களுக்கு திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாதம்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்களை பார்ப்பதன் வாயிலாக, மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உரமிட, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து, ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.
அவ்வகையில், இம்மாதம், 13 முதல், 17ம் தேதி வரை, தேசிய விருது பெற்ற, 'மல்லி' தமிழ் படத்தை திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது. மல்லி என்பது சந்தோஷ் சிவன் இயக்கி, 1998ல், வெளியான தமிழ்த்திரைப்படம். மல்லி என்ற ஏழை குடும்பத்தைச்சேர்ந்த, ஒரு சிறுமியின் கதையை மையமாக வைத்து, இப்படம் நகர்கிறது.
அவளுடைய பல கனவுகளில், முக்கியமான ஒன்று என்னவென்றால், கலகலப்பான திருவிழாவிற்கு அணிய, வண்ண மயமான ஆடை ஒன்றை பெற வேண்டும். இவ்வாறாக, தனது தேடலின் போது, அவள் சந்திக்கும் நபரைக்கொண்டு, நீல நிற அதிசய கல்லைக்கண்டுபிடிக்க புறப்படுகிறார். இந்த படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
அதேபோல, 1999-ம் ஆண்டு, 46வது தேசிய திரைப்பட விருதுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் விருதுகளை வென்றது.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள், மாதம்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.