ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.,வும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நேற்று ஆஜராகினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர்ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி மேற்கு வங்க மாநிலம்ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா என்ற இடத்தில் காரில் சென்றபோது, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காரில் இருந்த 49 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, மூன்று எம்.எல்.ஏ.,க்களையும் 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன், ராஜேஷ் கச்சாப் நேற்று முன் தினமும், அதற்கு முதல்நாள் இர்பான் அன்சாரியும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராகினர். அதேபோல், நமன் பிக்சல் நேற்று ஆஜராகினார். அமலாக்கத் துறை அதிகாரிகள் மூவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., குமார் ஜெய்மங்கல் சிங் மற்றும் அனுப் சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர், டிச., 24ல் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.