புதுடில்லி:மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பிறந்த நாளான பிப்., 19ம் தேதி. ஆக்ரா கோட்டையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் கலாசார நிகழ்ச்சி நடத்துவது குறித்து விரைவாக பரிசீலிக்க தொல்லியல் துறைக்கு, புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.பாட்டீல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், புதுடில்லி அருகே அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா கோட்டையில், சத்ரபதி சிவாஜி பிறந்த நாளான பிப்., 19ல் கலாசார நிகழ்ச்சி நடத்த தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டது.
ஆனால், அனுமதி தர தொல்லியல் துறை மறுத்து விட்டது.
இதையடுத்து, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பிரதிபா எம் சிங் விசாரித்தார்.
தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களில் தனியார் அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த தொல்லியல் துறை விதிமுறைப்படி அனுமதிக்க முடியாது. மனுதாரர், மஹாராஷ்டிர அரசுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்த முன்வந்தால், அந்த மனுவை பரிசீலிக்க முடியும்' என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மஹாராஷ்டிர அரசுடன் இணைந்து ஆக்ரா கோட்டையில் சத்ரபதி சிவாஜி குறித்து நிகழ்ச்சி நடத்த தொல்லியல் துறையிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அந்த மனுவை தொல்லியல் துறையும் விரைந்து பரிசீலிக்க வேண்டும். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், மனுதாரர் நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.