வால்பாறை : வால்பாறை நகரில், விபத்தை தடுக்க தன்னார்வலர் ஒருவர், இரண்டு இடங்களில் குவிகண்ணாடி பொருத்தியதற்கு, மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வால்பாறை நகரை சேர்ந்தவர் மேத்யூ; பில்டிங் இன்ஜினியர். சமூக சேவையில் அக்கறை கொண்ட இவர், மக்களின் பிரச்னைகளை நேரடியாக கண்டறிந்து, உதவி செய்து வருகிறார்.
வால்பாறை நகரில் டாக்சி ஸ்டாண்ட் வளைவு, வாழைத்தோட்டம் ஒர்க் ஷாப் வளைவு ஆகிய, இரு இடங்களில் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க, சொந்த செலவில் குவிகண்ணாடி பொருத்தியுள்ளார்.
விபத்து தவிர்த்து, பயணம் இனிதாக, அரசு நடவடிக்கையை எதிர்பார்க்காமல், பணிகள் மேற்கொண்ட, இவரது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் பிறகாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேத்யூ கூறுகையில், ''வால்பாறை மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக, மக்கள் நலன் கருதி எஸ்டேட் பகுதியில் சீரமைக்கப்படாத ரோடுகளில், பேட்ச் ஒர்க் செய்துள்ளேன். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மூன்று ரோடுகள் சந்திப்பில், பெரிய குழியை சீரமைத்தேன்.
''தற்போது, போக்குவரத்து நிறைந்த பகுதியில், விபத்தை தவிர்க்கும் வகையில், குவிகண்ணாடி பொருத்தியுள்ளேன்,'' என்றார்.