உடுமலை : உடுமலையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான ஹாக்கிப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த, 16 பள்ளி அணிகள் பங்கேற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதில், 96 பள்ளி அணிகள், 26 கல்லுாரி அணிகள், 41 பொதுப்பிரிவினர், 12 அரசு ஊழியர்கள் என, 138 ஆண்கள் அணி, 37 பெண்கள் அணி பங்கேற்றுள்ளன.
அவ்வகையில், உடுமலை நேதாஜி மைதானத்தில், பள்ளி அணிகள் இடையிலான ஹாக்கிப்போட்டி நடந்தது. மாணவர் பிரிவில், 11 அணிகளும், மாணவியர் பிரிவில், 5 அணிகளும் பங்கேற்றன.
முன்னதாக, போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், துவக்கி வைத்தார். இதில், தேர்வு செய்யப்படும் அணி, திருப்பூர் மாவட்டம் சார்பில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க., நகரச்செயலாளர் வேலுச்சாமி, நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளராக விஜய்பாண்டி செயல்பட்டார்.