கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே உள்ள, கோதவாடியில் மாலைக்கோவிலில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.
கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், உதவி மருத்துவர் கார்த்திகேயன், கால்நடை ஆய்வாளர் கவுசிநிஷா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஏசுதாஸ் எர்பெட் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆடு, மாடு, கோழி, நாய், என, 1,034 கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, புரூசெல்லா தடுப்பூசி போடப்பட்டது.மேலும், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்தப்பட்டது. வளர்ப்பு பிராணியான நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திய மாடுகளுக்கு, காது மடல்களில் அடையாளம் பதியப்பட்டது.முகாமில், தேர்வு செய்யப்பட்ட மூன்று கன்றுகள், மூன்று கறவை மாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி பரிசுகளை வழங்கினார்.