திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், எண்ணெய் வித்து பயிரான வேர்க்கடலை பயிரிடுகின்றனர். வேர்க்கடலை பருப்பில், எண்ணெய், புரதம், உயிர்ச் சத்து, தாது உப்பு போன்ற சத்துக்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 ஆயிரத்து 780 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 2.50 ஏக்கருக்கு, ஜிப்சம் 400 கிலோ வீதம், 40 - 45வது நாளில், பாசனப் பயிருக்கும், 40 - 75வது நாளில், மானாவாரி பயிருக்கும், செடிகளின் ஓரமாக இட வேண்டும்.
இதன் வாயிலாக, வேர்க்கடலை உற்பத்தி அதிகரிக்கும். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.
அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும், ஜிப்சம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலில் முன்பதிவு செய்து, வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகுமாறு, வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.