திருவூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதையடுத்து, திருவூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பானுமதி, பூச்சியியல் துறை விஞ்ஞானி வி.அ.விஜயசாந்தி மற்றும் விஞ்ஞானிகள் பள்ளிப்பேட்டை வட்டாரத்துக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, பான்டரவேடு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த மிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சி தாக்குதல் பரவலாக காணப்பட்டது.
கட்டுப்படுத்தும் முறை
மிளகாய் சாகுபடியில் ஊடு பயிராக அகத்தியை பயிரிட வேண்டும். வெங்காயத்தை ஊடுபயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்யக்கூடாது.
மக்காச்சோளம் அல்லது செண்டுமல்லி பயிரை வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம். நாற்றுகளின் மேற்பரப்பில் நீரைத் தெளிப்பதனால் இலைப்பேன்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தலாம்.
ஒரு கிலோ விதைக்கு, 'இமிடாக்லோப்ரிட்' 70 சதவீதம் 'ஐ.என்.எஸ்.' 12 கிராம என்ற அளவில் விதை நேர்த்தி செய்து நாற்று விட வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 12 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
தாக்குதல் அதிகம் இருப்பின் 10 லிட்டர் தண்ணீரில் இமிடாக்லோப்ரிட் 3 மில்லி அல்லது 'தையக்லோப்ரிட்' 21.7 சதவீதம், எஸ்.சி., 6 மில்லி அல்லது 'எமாமெக்டின் பென்சோயேட்' 5 சதவீதம் 4 கிராம் அல்லது 'பிப்ரோனில்' 5 சதவீதம் 15 மில்லி என்ற அளவில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளிக்கலாம் என, திருவூர் வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.