ரோடு மோசம்
உடுமலை ராமசாமி நகர் செல்லும் ரயில்வே கேட் அருகில், ரோடு மேடும் பள்ளமுமாய் காணப்படுகிறது. இதில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சைக்கிளில் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சதீஸ்குமார், உடுமலை.
கூடுதல் பஸ் இயக்கணும்
காலை நேரங்களில், உடுமலை அரசு கலைக்கல்லுாரிக்கு குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. அருகில் ஐ.டி.ஐ., யும் செயல்படுகிறது. இதனால், மாணவர்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கழகம் காலையில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
- வசந்தகுமார், உடுமலை.
நகராட்சியினர் கவனத்திற்கு
உடுமலை, ஏரிப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, உயர்மின் கோபுர விளக்கு, காலை, 5:30 மணிக்கே அணைக்கப்படுகிறது. இதனால், காலை பணிக்கு, பஸ்சுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, விளக்கும் அணைக்கும் நேரத்தை, 6:00 மணிக்கு மாற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன், உடுமலை.
விபத்து அபாயம்
உடுமலை - பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் உள்ள, செடிகள் நீண்டு வளர்ந்துள்ளதால், ரவுண்டானா அருகே செல்லும்போது, பை-பாஸ் ரோட்டிலிருந்து வரும் வாகனங்களை காண முடியாமல் விபத்து அபாயம் உள்ளது. செடிகளின் அடர்த்தியை குறைத்து, முறையாக பராமரிப்பதால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும்.
- மூர்த்தி, உடுமலை.
கால்வாய் மூடணும்
உடுமலை தளி ரோட்டிலிருந்து, தாராபுரம் ரோடு செல்லும் வளைவில் சாக்கடை கால்வாய் எந்த அடையாள பலகைகளும் இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால் ரோட்டோரத்தில் வரும் வாகனங்கள், தடுமாறி கால்வாயில் விழுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினரும் பாதிக்கப்படுகின்றனர்.
- ரங்கராஜன், உடுமலை.
திறந்த வெளியில் கழிவுகள்
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. வீதி அசுத்தமாவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
- சித்ரா, உடுமலை.
கொசுத்தொல்லை
உடுமலை, பழனியாண்டர் நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக நிற்கும் தண்ணீரால், அப்பகுதியில் கொசுத்தொல்லை மிகுதியாகியுள்ளது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினால் ஏற்படும் தொற்று பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
- வேல்முருகன், உடுமலை.
தெருவிளக்குகள் எரியவில்லை
உடுமலை ராமசாமி நகர் அரசு கலைக்கல்லுாரி ரோட்டில், தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. வெளியூரிலிருந்து அவ்வழியாக வரும் வாகன ஓட்டுனர்கள், அங்குள்ள வேகத்தடையை அடையாளம் காண முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- ராகவன், எலையமுத்துார்.
பராமரிப்பு இல்லை
உடுமலை, சீனிவாசா வீதியில் வேகத்தடைகள் பராமரிப்பில்லாமல் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் தடைகளின் மீது கட்டுபடுத்த முடியாமல் ஏறி சரிந்து விழுகின்றனர். இதனால், அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வேகத்தடைகளை பராமரிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்ரமணி, உடுமலை.