கல்விசாரா மன்றங்கள் சார்பில் நடத்தப்படும், தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றால், வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் முறையாக இயங்காததால், கல்விசாரா மன்ற செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.
நடப்பாண்டில் மன்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டதோடு, அறிவியல் ஆர்வத்தை துாண்ட, வானவில் மன்றம், கற்பனை ஆற்றலை மேம்படுத்த சிறார் திரைப்படம் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பள்ளிகளில் நடக்கின்றன.
இம்மன்றங்களை இணைத்து, தனித்திறன் போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே, இப்போட்டிகளில் பங்கேற்பர்.
பள்ளிகளில் இதுவரை திரையிடப்பட்ட ஏழு திரைப்படங்களுக்கு சுவரொட்டி தயாரித்தல், கதை சுருக்கம் எழுதுதல், ஒருபகுதியை நடித்து காட்டுதல், திரை விமர்சனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
இதேபோல், வினாடி - வினா போட்டி, இலக்கிய மன்றத்தில் பேச்சு, கட்டுரை போட்டிகள், வானவில் மன்றத்தில் அறிவியல் மாதிரிகள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளி அளவிலான போட்டிகள் இம்மாதம் துவங்க வேண்டும். தொடர்ந்து, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகளை, ஏப்., 11ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர் வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -