திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது.
தனியார் பழுதடைந்தும், கழிப்பறை வசதியில்லாததால் பெண் மருத்துவர், ஊழியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கால்நடை மருந்தகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, பொதுப்பணித் துறையின் சார்பில், நபார்டின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2021- - 22ம் ஆண்டு கீழ், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கால்நடை மருந்தக கட்டடம் கட்டுவதற்கு 'டெண்டர்' விடப்பட்டு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.
ஆனால் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணாமல் உள்ளது.
இது குறித்து கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பூனிமாங்காடு கால்நடை மருந்தகம் கட்டடப் பணிகள் முழுமையாக முடித்து மின் இணைப்பும் பெற்று ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும் திறக்கப்படாததால் கால்நடை பெண் மருத்துவர் அவதிப்படுகிறார்.
திருத்தணி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் திறப்பு விழாவிற்கு அழைத்துள்ளதால் அவரது தேதி கிடைக்காமல் திறப்பதில் காலதாமதம் ஆகிறது.
எம்.எல்.ஏ., தேதி கிடைத்ததும் கால்நடை மருந்தகம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.