திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக தமிழ்நாடு நீர்வள - நிலவள திட்டம், 2022- - 23ம் ஆண்டு நந்தியாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் இன்று முதல் துவங்கப்படுகிறது.
இந்த முகாம், 12 ஊராட்சிகளில் அடுத்த மாதம், மார்ச் 7ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறையின் உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
நந்தியாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தின் கீழ், இன்று முதல் வருவாய் கோட்டத்தில் கால்நடை சிறப்பு முகாம் துவங்குகிறது.
நாளை, திருநாதராஜபுரத்தில் துவங்கி, அடுத்த மார்ச் மாதம், 7ம் தேதி பீமாரெட்டியூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு முகாம் நிறைவடைகிறது.
அதாவது, சகஸ்ரபத்மாபுரம், ராகவநாயுடுகுப்பம், கோரமங்கலம், தேவலம்பாபுரம், வெள்ளாத்துார், சூரியநகரம், மஞ்சூர் கண்டிகை இருளர் காலனி, எஸ்.அக்ரஹாரம், ஏ.எம்.பேட்டை, கொளத்திக்குப்பம், பீமாரெட்டியார் மற்றும் திருநாதராஜபுரம் என, மொத்தம் 12 ஊராட்சிகளில் முகாம் நடக்கிறது.
முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், கிடேரி கன்றுகள் மேலாண்மை, மடிவீக்க நோய் சிகிச்சை, சினையுறா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சை போன்றவை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement