பார்வைக்கு தெரியாத பெயர்பலகை
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தெருப்பெயர் அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பார்வைக்கு தெரியாமல் உள்ளது. இதனால் புதிதாக வரும் மக்கள், தெருப்பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும்.
--- -சரவணன், கிணத்துக்கடவு.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரில், அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதற்கு திட்டமிட வேண்டும்.
-- -வேல்முருகன், வால்பாறை.
இறைச்சிக்கழிவை அகற்றுங்க!
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், சித்தி விநாயகர் நகர் பகுதியில் குப்பையோடு குப்பையாக கோழி கழிவும், இறந்த நாய் சடலங்களும் கிடப்பதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெரு விளக்குகள் இல்லாத பகுதியாகவும் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.
- -காளீஸ்வரன், சூளேஸ்வரன்பட்டி.
குப்பையால் பாதிப்பு
பொள்ளாச்சி, சேரன் நகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அருகே குப்பை அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்றி, அப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -மனோஜ், பொள்ளாச்சி.
வேகத்தடுப்பு அமைக்கணும்!
வால்பாறை நகரில் இருந்து, சோலையாறு அணை செல்லும் ரோட்டில், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, அபாயகரமான வளைவுகளில் வேகத்தடுப்பு அமைக்க, நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.
- -கவியரசு, வால்பாறை.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் அமரும் இடம் மற்றும் பஸ் வெளியே வரும் பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -பார்த்திபன், பொள்ளாச்சி.
மதுபாட்டில்கள் உடைப்பு
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், மது பாட்டில்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியை பயன்படுத்தும் ரயில் பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். சிதறிக்கிடக்கும் மது பாட்டில்களை அகற்றி, இனிமேல் அங்கு மதுபாட்டில்களை யாரும் வீசாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -வெள்ளிங்கிரிநாதன், கிணத்துக்கடவு.
நெரிசலால் அவதி
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதியில், ரோட்டின் இரு புறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் பார்வையிட்டு, வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.
- -மனோஜ், பொள்ளாச்சி.
அத்துமீறும் லாரிகளால் இடையூறு
பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால், மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. லாரிகளை 'பார்க்கிங்' செய்வதை தடுக்க வேண்டும்.
- மணிகண்டன், பொள்ளாச்சி.
Advertisement