உடுமலை : உடுமலையில், கால்நடைத்துறை சார்பில் நடந்த, வெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமில், 200, வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உடுமலையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் - ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பொதுமக்களிடையே, வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம், நேதாஜி மைதானத்தில் நேற்று நடந்தது.
கால்நடைத்துறை, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கவுசல்யா தலைமை வகித்தார். அரசு கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவர் மற்றும் உதவி இயக்குனர் ராமசாமி, உதவி டாக்டர்கள் நிஷா, நந்தினி, சுகன்யா, கால்நடை மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் விவேகானந்தன் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இம்முகாமில், வீடுகளில் வளர்க்கப்படும், 200க்கும் மேற்பட்ட நாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில் கால்நடை டாக்டர்கள் பேசியதாவது:
வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், 3 மாத காலத்திலிருந்து, வெறி நோய் தடுப்பூசி செலுத்துவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பிராணிகள் கடித்தால், கடித்த பகுதிகளில் சூடு வைப்பது, மஞ்சள் தடவுவது, உப்புத்தண்ணீர் ஊற்றுவது, கிருமி நாசினி ஆகியவை தடவக்கூடாது.
பிராணிகள் கடித்தால், கடித்த பகுதியில், 20 முதல், 30 நிமிடங்கள் சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். பின்னர், மருத்துவமனைகளுக்குச்சென்று, தடுப்பூசி உள்ளிட்ட உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், வெறி நோய் தடுப்பு வழிமுறைகள், பிராணிகள் நலம் குறித்த விளக்கங்கள், பிராணிகள் வளர்ப்போருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு, பேசினர்.
தொடர்ந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வெறி நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கால்நடைத்துறை டாக்டர்கள் பங்கேற்றனர்.
நகராட்சி சார்பில், 'செல்லப்பிராணிகள் வளர்ப்போர் நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். வீட்டிற்குள்ளேயே பிராணிகளை வளர்த்துக்கொள்வதோடு, அருகிலுள்ள வீட்டாருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
Advertisement