உடுமலை : குடிசை மாற்று வாரியம் வாயிலாக, வீடு வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து வருவதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:
மாவட்டத்திலுள்ள வீடு இல்லாதவர்களுக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதில், இடைத்தரகர்களாக செயல்படும் பலரும், வீடு வாங்கி தருவதாக கூறி, மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வது தொடர்ந்து வருகிறது.
சமீப காலமாக குடிசை மாற்று வாரியம் வாயிலாக, வீடு வாங்கி தருவதாக பல கும்பல்கள் களத்தில் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மோசடியில் ஈடுபட்டு வரும் நபர் மீது, எந்தவித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.