பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி அரசுப்பள்ளியில், அறிவியல் சோதனைகள், மாணவர்களுக்கு செய்து காண்பித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வானவில் மன்றம் வாயிலாக அறிவியல் சோதனைகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சுகந்தி வரவேற்றார்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, கருத்தாளர் சங்கீதா சோதனைகளை செய்து காண்பித்தார்.
மாய எழுத்துகள், குதிக்கும் பந்து, பெர்னோலிஸ் தத்துவம், நீரின் மட்டம், மாய முட்டை, அமிலகார தர சோதனை, இயற்கை நிறங்காட்டிகள், எலுமிச்சை பழத்தில் மின்சாரம் தயாரித்தல், தகடுகளை துாய்மை படுத்தல் போன்ற சோதனைகளை செய்து காண்பித்தார்.
அன்றாட வாழ்வில் மேற்கண்ட சோதனைகள் எங்கெல்லாம் பயன்படுகிறது, என, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா விளக்கினார்.
மேலும், எரிவதற்கு ஆக்சிஜன் தேவை, தீயணைப்பான் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுடன் செய்துவிளக்கம் அளித்து, கலந்துரையாடல் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் மலையாண்டிசாமி வழி காட்டுதலுடன், அறிவியல் சோதனைகளை மாணவர்களே செய்து காட்டினர்.
மாணவர்களின் கேள்விகள் பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தம், 10 வகையான சோதனைகளை மாநில ஒருங்கிணைப்பாளர் போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement