உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், காய்கறி விதை தொகுப்பு, மானியத்தில் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், மைவாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கடத்துார் ஆகிய நான்கு ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க, எட்டு விதமான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதில், வீட்டு தோட்டத்திற்கான கீரை விதைகள், வெண்டை, முருங்கை, முள்ளங்கி, தக்காளி, கொத்தவரை பொரியல் தட்டை, பாகல் ஆகிய எட்டு விதமான விதைகள் உள்ளன.
காய்கறி விதைத்தொகுப்பின் மொத்த விலை, 40 ரூபாய் ஆகும்; தோட்டக்கலைத் துறை வாயிலாக, 75 சதவீத மானியத்தில், எட்டு விதமான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.ஒரு கிராமத்திற்கு, 100 எண்கள் என்ற அடிப்படையில், விதைத்தொகுப்புகள், 4 கிராமங்களுக்கு, 400 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விதை தொகுப்பினை பெறுவதற்கு, ஆதார் அட்டை நகலுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement