வால்பாறை : வால்பாறை நகராட்சியில், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
செல்வக்குமார் (தி.மு.க.,): மக்கள் பிரச்னைக்காக மன்றக்கூட்டத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கனகமணி: வார்டில் தெருவிளக்கு பழுதடைந்து பல மாதங்களாக சரிசெய்யப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நகராட்சி நிர்வாகம் செய்துதர மறுப்பது வேதனையாக உள்ளது.
வீரமணி (வி.சி.,): வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ரொட்டிக்கடையில் கூடுதல் கழிப்பிடம் கட்ட வேண்டும்.
ராஜேஸ்வரி (தி.மு.க.,): யானைகள் நடமாட்டம் மிகுந்த வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உருக்குலைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வழிப்பாதையில், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
கலாராணி: ேஷக்கல்முடி பகுதியில் மயானக்கூரை அமைப்பதுடன், ரோட்டையும் உடனடியாக செப்பனிடவேண்டும்.
இந்துமதி: சோலையாறு அணைப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும். வால்பாறையில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, இந்த ஆண்டு கோடை விழாவை முன் கூட்டியே நடத்த வேண்டும்.
காமாட்சி: வால்பாறை அண்ணாநகர், கக்கன் காலனி, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
மணிகண்டன் (அ.தி.மு.க.,): முடீஸ் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதாரம் பாதிக்கிறது. குப்பையை உடனடியாக அகற்றும் வகையில், நிரந்தரமாக துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
ஜெயந்தி (தி.மு.க.,): பன்னிமேடு ரோடு கடந்த, ஏழு மாதமாக சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. ரோட்டை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை.
உமாமகேஸ்வரி: சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் கட்டவேண்டும். உபாசி துவக்கப்பள்ளியில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும்.
கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட, 77 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க., கவுன்சிலர்களே புலம்பல்!
நகராட்சி கூட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 5வது வார்டு கவுன்சிலர் கவிதா, 6வது வார்டு கவுன்சிலர் சத்தியவாணிமுத்து ஆகியோர் பேசும்போது, 'வார்டில் எந்த வேலையும் நடப்பதில்லை, குறிப்பாக, ரோடு, தெருவிளக்கு, பள்ளி தடுப்புச்சுவர் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. கல்யாணம், காதுகுத்துக்கு போகிற இடங்ளில், பிரச்னைகளை சொல்லி மக்கள் கேள்வி கேட்கறாங்க. பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். நகராட்சியில் எங்களது வார்டுகளில் பணிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது,' என்றனர்.
Advertisement