கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், நவரைப் பருவத்தில் 5,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுளளது.
தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரான எம்.டி.யு., 1010 ரக நெல் பயிரில் பரவலாக குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது.
போதிய இடைவெளியின்றி பயிர் நடவு செய்தல், தழைச்சத்து உரங்களை அதிக அளவு இடுதல், பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுதல் மற்றும் வயலில் அதிகப்படியான நீர் கட்டுதல் போன்றவைகளால் குலைநோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம் உட்பட பல பகுதிகளில் கடம்பத்துார் வேளாண்மை உதவி இயக்குனர் செ. தீபிகா மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விவசாயிகளிடம் வயலில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும். டிரைசைகுளோசோல் மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் அல்லது 'மெடோமிநோஸ்டரோபின்' 200 மி.லி,, அல்லது அசாக்ஸிஸ்டேராபின் 200 மி.லி., என்ற அளவில் ஒரு கிராம் மற்றும் மி.லி.,க்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் என அறிவுரை வழங்கினர்.
மேலும், சந்தேகங்களை கடம்பத்துார் வேளாண் துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
Advertisement