ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, மகா முனிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த, 5ம் தேதி காலையில் குண்டம் கட்டுதல், மாலையில் சித்திர தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த, 6ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கொடி இறக்குதல், மஞ்சள் நீராடலும், இரவு மகா முனி பூஜையும் நடைபெற்றது.
மகா முனி அருளாளி, கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்பின் மகா முனிக்கு, புளி சாதம், தயிர், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்றவை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.
Advertisement