சோழவரம்:சோழவரம் அடுத்த, செம்புலிவரம் பகுதியில் ஒரக்காடு, பூதுார் வழியாக அருமந்தை செல்லும் மாநில நெடுஞ்சாலை முழுதும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இதனால் வாகன ஒட்டிகள், கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகினர்.
தொடர் கோரிக்கையின் பயனாக, தற்போது அதிக பாதிப்பிற்கு உள்ளான ஒரக்காடு- - பூதுார் இடையே, 3 கி.மீ., தொலைவிற்கு, 6 கோடி ரூபாயில் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதற்காக சேதம் அடைந்து கிடந்த தார்ச் சாலைகள் முழுதும் அகற்றப்பட்டு உள்ளன. சாலை முழுதும் சிறிய சரளைகற்கள், மண் மட்டுமே உள்ளன.
அதன் வழியாக வாகனங்கள் செல்லும் புழுதி பறக்கிறது. இதனால் கிராமவாசிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், வியாபாரிகள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சாலைப் பணிகள் முடியும் வரை, புழுதி ஏற்படுவதை தடுக்க, சாலை முழுதும் தண்ணீர் தெளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சாலைப் பணிகளை துரிதமாக முடித்து விடுவோம். பணிகள் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து, சாலையில் தண்ணீர் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement