திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகடம்பூர் மோட்டூர் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கிராமத்திற்கு கிழக்கு புறத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டில் எரிமேடை, ஆழ்துளை கிணறு அமைத்து கைபம்பு அமைத்தது.
ஆனால், முறையாக பராமரிக்காததால் ஆழ்துளை கிணற்றில் அமைத்த கைபம்பு பழுதாகி இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம், பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் சுடுகாடு பகுதியில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த செடிகளுக்கு சுடுகாட்டில் உள்ள கைபம்பு வாயிலாக தண்ணீர் பிடித்து செடிகளுக்கு ஊற்றி வந்தனர்.
தற்போது கைபம்பு பழுதாகியுள்ளதால், செடிகள் உலர்ந்து விடும் அபாயம் உள்ளது. மேலும், கிராம மக்கள் சுடுகாட்டில் இறுதி சடங்கிற்கு தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்படுகின்றனர்.
பழுதடைந்த கைபம்பை சீரமைத்து சுடுகாட்டில் உள்ள மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டும், காணாமல் உள்ளனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement