உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பள்ளி மாணவியருக்கான கராத்தே பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சி அளிக்கும் வகையில் அரசின் சார்பில் கராத்தே வகுப்புகள் நடத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலையில் இந்த வகுப்புகளுக்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.
நடப்பு 2022 - 23 கல்வியாண்டில் இப்பயிற்சி வகுப்பு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6, 7, 8 படிக்கும் மாணவியருக்கு பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, மூன்று மாதங்கள் கராத்தே வகுப்பு நடத்தப்படுகிறது.
ஒரு நாளுக்கு, ஒருமணி நேரம் வீதம் வாரத்தில் இரண்டு நாட்களும், மாதத்தில் 8 வகுப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பிப்., 5 முதல் இந்த வகுப்புகள் உடுமலை, குடிமங்கலம் வட்டார அரசு பள்ளிகளில் ஆரம்பமாகியுள்ளது.
கூடுதல் வசதிகள்
பெண் குழந்தைகளுக்கு எதிரான, வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழும் நிலையில், இதுபோன்ற தற்காப்பு பயிற்சி மிகவும் அவசியமாகவே உள்ளது. ஆனால் மூன்று மாதங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.அதிலும் வகுப்புகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. எட்டாம் வகுப்பு முடித்தபின் மாணவியர் மீண்டும் இப்பயிற்சி பெறுவதற்கு அவர்கள் தனியார் மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், தொடர்ந்து பயிற்சி பெற மாணவியர் ஆர்வம் காட்டுவதில்லை.
இதுதவிர, மாணவர்களும் இதுபோன்ற தற்காப்பு பயிற்சி அவசியமாகவே உள்ளது. இருபாலரும் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகளை பொதுவாக மாற்றுவதற்கும், 5 முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்சி அளிப்பதற்கு, திட்டத்தை விரிவுபடுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement