கோவை கண்ணப்ப நகர் மயானத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, மயான பணியாளராக உள்ள வீரபத்திரசாமி: என் தாத்தா, அப்பாவை தொடர்ந்து, மூன்றாவது தலைமுறையாக, நான் மயான பணியாளராக உள்ளேன். என் உயரம், மூன்றரை அடி தான். ஆனாலும், இந்த உயரம் என் பணிக்கு பிரச்னையாக இருந்ததில்லை.
எங்க அப்பாவுக்கு, நான் மூன்றாவது பையன். எங்களுக்கு ஆட்டம், பாட்டம், விளையாட்டு எல்லாமே, இந்தக் காட்டுல தான்.
தாத்தா, அப்பா வேலை செய்ததை வேடிக்கை பார்த்தேன். சுடுகாட்டுக்கு வர்றவங்க சாப்பாடு, காசு குடுத்துட்டு போவாங்க; அதை செலவழிப்பேன்.
நன்றாக படித்து, அரசு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன். கூட படித்தவர்கள், 'பக்கத்தில் உட்காராதே...' என்று ஒதுக்குவாங்க.
'குட்டையா, கட்டையா'ன்னு தான் கூப்பிடுவாங்க; 'என்னை அப்படி கூப்பிடாதீங்க'ன்னு நிறைய பேரிடம் சண்டை போட்டிருக்கேன். இந்த, 'டார்ச்சரை' தாங்க முடியாமல், பள்ளிப்படிப்பை கைவிட்டேன்; ஏழு வயதிலேயே மயான பணியாளர் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.
இப்ப எல்லாமே, இந்த சுடுகாடு தான். காலை, 5:00 மணிக்கு எழுந்து டீ குடித்து விட்டு காட்டுக்கு வந்துடுவேன். இங்கே இருக்கிற சுமைதாங்கி அம்மாவ (சமாதிக் கல்) கும்பிட்டு, வேலையை துவங்குவேன்.
மாதத்திற்கு இரண்டு, மூன்று சவம் வரும்; மற்ற நாட்களில், சமாதியை சுத்தப்படுத்தும் வேலை பார்ப்பேன்; அதுக்கு 100 இல்ல 200 ரூபாய் கொடுப்பாங்க.
சவம் வந்தால், 700 முதல், ௧,௫௦௦ ரூபாய் வரை கொடுப்பர். கொரோனா நேரத்தில் ரொம்ப கஷ்டப்பட்டோம்; அப்ப வேலையும் அதிகம்.
அப்ப வந்த சவத்துக்கு பணமும் கொடுக்கவில்லை. ஊர்க்காரங்க, 'வெளிய வரக்கூடாது'ன்னு உள்ளேயே இருக்கச் சொல்லிட்டாங்க. நான், அம்மா, தங்கச்சி எல்லாரும் மாதக்கணக்கில் காட்டிலேயே தான் இருந்தோம்.
கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தாங்க... 'இவரு இவ்வளவு உயரம் தானா, இந்த வேலையா பார்க்கிறார்'னு நிராகரிச்சுட்டே இருக்காங்க.
சராசரி மனிதர்கள் மாதிரி, நம்ம வாழ்க்கையும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது; அதுக்கு மற்ற மனிதர்களும் மாற வேண்டும்.
யாரையும் உருவத்தை வைத்து, எடை போடக்கூடாது. எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் குழி வெட்டுறேன்; ஆனால், பலர் எனக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க.
பேய் எல்லாம் கட்டுக்கதை தான்; உயிரோட இருக்கிற மனுஷன் தான் ரொம்ப கொடூரமானவன். வன்மம், பழிவாங்கல், பொறாமைன்னு எல்லா ஆபத்தும், அவன் வாயிலாகவே வரும்.
வாழ்க்கை ரொம்ப சின்னது. இந்த இடத்திற்கு வந்து, ஒரு நாள் இருந்தாலே, அவர்களுக்கு வாழ்க்கை புரிந்து விடும்.