பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, இலங்கை அகதிகள் முகாம்களில் புதியதாக கட்டப்படும் வீடுகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. ஆழியாறு பகுதியில், 765 பேரும்; கோட்டூரில், 587 பேரும் வசிக்கின்றனர்.
இவர்களது வீடுகள் பழுதடைந்ததால் புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இரண்டு கோடியே, 14 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, புதிதாக வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. கோட்டூர் மற்றும் ஆழியாறு பகுதிகளில் மொத்தம், 429 வீடுகள் கட்டப்படுகிறது.
இப்பணிகளை, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் அலமேலுமங்கை, சப் - கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் ரேணுகாதேவி, ஆனைமலை ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சீனிவாசன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதன்பின், பில்சின்னாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த கலெக்டர், திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். வேளாண்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Advertisement