வால்பாறை : வால்பாறை நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
வால்பாறை நகரில், போஸ்ட் ஆபீஸ் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு வரையிலும், நெடுஞ்சாலை துறை ரோட்டை ஆக்கிரமித்து, அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும், என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்படும் இடையூறு குறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி, உதவி பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில், விதிமுறையை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. அதேபோன்று, ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பர பலகைகளையும் அற்றினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் வால்பாறை நகரில், ரோட்டை ஆக்கிரமித்து கடந்த, 20 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து அதே இடத்தில் கடைகள் வைத்தால், காவல்துறை வாயிலாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
Advertisement