செங்குன்றம்:சென்னை மாநகரை அலங்கோலமாக்கும், 'போஸ்டர்' கலாசாரத்தின் சீர்கேடுகள் குறித்து, நம் நாளிதழில் 5ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம், சென்னையை சீர்கேடிற்கு ஆளாக்கும், 'போஸ்டர்' கலாசாரத்தை தடுக்க, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என 6ம் தேதி எச்சரித்தது.
ஆனால், சென்னையை ஒட்டிய, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், அரசு பள்ளி கட்டடம், ஊராட்சி, பேரூராட்சி, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம்.
அரசு மருத்துவமனை கட்டடம், மேம்பாலத்தின் சுவர், அரசு வங்கி, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், நிழற்குடைகள் என, ஏராளமான அரசு அலுவலக வளாகங்கள், சாலை தடுப்புகள் போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
மேலும், அரசியல் கட்சி மற்றும் சங்கத் தலைவர்களை வரவேற்பது, சினிமா நடிகர்களின் ரசிகர் மன்ற கொண்டாட்டங்களுக்காக, சாலை தடுப்பில் ஆபத்தான வகையில், கொடிக் கம்பங்கள் நடுவது உள்ளிட்ட பல்வேறு, அத்துமீறல்கள் தங்கு தடையின்றி நடக்கின்றன.
மேலும், நாள்கணக்கில் விளம்பர 'டிஜிட்டல் பேனர்'களும் வைக்கப்படுகின்றன. இது, திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது.
ஆனால், சென்னை மாநகராட்சி போல, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியாவது, கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க, உள்ளாட்சி மன்ற நிர்வாக அமைப்புகளுக்கு, உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.