மேட்டுப்பாளையம் : தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், வனத் தீ தடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், உதவி கமாண்டர்கள் தாமோதர சிங், பவன்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில், 50 பேர் கொண்ட படையினர், கோவை வந்தனர். கடந்த, 6ம் தேதி கோவையில் உள்ள, மாநில வனப்பணிகளுக்கான வனஉயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு பயிற்சிகளை துவக்கி வைத்தார்.
நேற்று களப்பணியை மேற்கொள்ள பேராசிரியர் வித்யாசாகர் தலைமையில், மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிக்கு வந்தனர். இவர்களை வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் வரவேற்றார்.
பின் இவர்களுக்கு வனப்பகுதியில் ஏற்படும் தீயை, எவ்வாறு தடுப்பது குறித்து, வரைபடம், ஜி.பி.எஸ்., கருவிகளை வைத்து, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில வனப் பணியாளர்களுக்கான வன உயர் பயிற்சியாக பேராசிரியர் வித்யாசாகர் கூறியதாவது:
தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு விபத்து, வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பேரழிவிலிருந்து, பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் வனப்பகுதியில் ஏற்படும் தீயை அணைப்பது குறித்த பயிற்சி பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் பார்லிமென்டில் வனத்தீயை தடுப்பதும், கட்டுப்படுத்தவும், வனத்துறையினரோடு இணைந்து, எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து, களப்பயிற்சி பெற வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை அடுத்து, 50 தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு, வனப்பகுதியில், ஏற்படும் வனத்தீயை எவ்வாறு தடுப்பது குறித்து, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், 12ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளிலும், 13ம் தேதியிலிருந்து, 18ம் தேதி வரை திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பயிற்சியில் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் நில அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.