மேட்டுப்பாளையம் : காந்தை ஆற்றுத் தண்ணீரில் ஏற்பட்ட அலைகளால், தார் ரோடு சேதம் அடைந்துள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டில், லிங்காபுரம், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், ஆளூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. சிறுமுகை, லிங்காபுரம் பகுதி விவசாயிகள், காந்தை ஆற்றை கடந்து சென்று விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாக, பவானிசாகர் அணையில், 100 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், காந்தை ஆற்றில் நீர் தேக்க தண்ணீரில், பாலமும், ரோடும் மூழ்கி இருந்தது.
காற்று வேகமாக அடிக்கும் போது, அலையின் வேகத்தால், தார் ரோட்டின் இரு பக்கம், அரிப்பு ஏற்பட்டது. ரோட்டின் இரு பக்கம் தார் ரோடு சேதம் அடைந்து, தார் கலவை ஜல்லிக்கற்கள் கீழே சரிந்து விழுந்தது.
பாதி அளவுக்கு ரோடு சேதம் அடைந்ததால், இவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள், மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது: காந்த வயல், மொக்கை மேடு ஆகிய பகுதிகளில் வாழை பயிர் செய்து வருகிறோம். தோட்டத்துக்கு தேவையான உரம் மற்றும் அறுவடை செய்த வாழைத்தார்களை, லாரிகளில் ஏற்றி, இந்த ரோடுகள் வழியாக வருவோம். தண்ணீரில் ஏற்பட்ட அலைகளால், ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேதம் அடைந்துள்ளது.
இவ்வழியாக தற்போது லாரிகள் செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்த வாழைத்தார்களை எப்படி கொண்டு வருவது என, தெரியாமல் உள்ளோம்.
எனவே ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டி, ரோடு போடும் வரை, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் அல்லது நெடுஞ்சாலை துறை நிர்வாகம், சேதம் அடைந்த ரோட்டின் இரு பக்கம், கற்கள் அடுக்கி, ரோட்டை அகலப்படுத்தி தார் போட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.