ஆனைமலை : ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.எஸ்.பி., கீர்த்திவாசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய குழு, நேற்று அதிகாலை முதல் ஆய்வு மேற்கொண்டது.
அதில், ஆனைமலை, அம்பராம்பாளையம், காளியாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கஞ்சா விற்பனை செய்து, ஏற்கனவே கைதாகி கண்காணிப்பில் உள்ளவர்களின் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆழியாறு சோதனைச்சாவடிகளில் வரும் வாகனங்களில், கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளதா என கண்காணிப்பு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதாகி வெளியே வந்தவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு செய்யப்படுகிறது. சிறப்பு ஆய்வாக நேற்று அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவர்களை தாசில்தார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, இது போன்று குற்றங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.
அவர்கள், நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி, கஞ்சா விற்பனை செய்தால், ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்க வருவாய்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதுகுறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது,' என்றனர்.
வால்பாறை டி.எஸ்.பி., கூறியதாவது:
போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு குழு அமைத்து, காலை, 5:00 மணி முதல் கண்காணிப்பு மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. சோதனைச்சாவடிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்யப்பட்டன.
வால்பாறை சரகத்துக்குள் கஞ்சா ஊடுருவக்கூடாது என்பதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எல்லைக்குள் கொண்டு வந்தால் கைது செய்யப்படுவர் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்று ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பதுக்கியவர் கைது
வால்பாறை கக்கன் காலனியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், அந்தப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, முத்துக்குமார், 23, என்பவர், விற்பனைக்காக, 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.