திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலை சுற்றியும் பச்சரிசி மற்றும் புண்ணாக்கு மலைகள் உள்ளன. இதனால் அதிகளவில் குரங்குகள் முருகன் கோவில் தேர்வீதி மற்றும் உட்புறத்திலும் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக பக்தர்கள் பூஜை செய்வதற்கு கொண்டு வரும் தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை பார்த்தால் குரங்குகள் அதை பறித்து செல்கின்றன.
சில நேரத்தில் பக்தர்களை கடிக்கவும் செய்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில், 25க்கும் மேற்பட்ட குரங்கள் திடீரென மூலவர் சன்னிதி, வள்ளி - தெய்வானை சன்னிதிகளில் புகுந்தன.
இதனால் பக்தர்கள் மற்றும் கோவில் குருக்கள் குரங்குகளை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு அங்கியிருந்து தப்பி ஓடினர்.
இந்த குரங்குகள் ஒரு மணி நேரம் ஆகியும் அங்கிருந்து செல்லாமல் உட்கார்ந்திருந்ததால் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறை ஊழியர்கள் வந்து பட்டாசுகள் வெடித்து அங்கிருந்து குரங்குகளை விரட்டி அடித்தனர்.
இதனால் ஒரு மணி நேரம் கோவில் உட்புறத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட வனத் துறை அதிகாரி உத்தரவின்படி, திருத்தணி வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மலைக்கோவிலில் சுற்றித்திரியும் குரங்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு, 10க்கும் மேற்பட்ட கூண்டுகள் மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
தற்போது, மலைக்கோவில் உட்புறத்தில் கூண்டுகள் வைத்து, குரங்குகளை பிடிப்பதற்கு தயாராக உள்ளனர்.