உடுமலை : உடுமலையில், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த, குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.
உடுமலை பகுதிகளில், பி.ஏ.பி., பிரதான கால்வாய் மற்றும் தளி கால்வாய் பகுதிகளில், சட்ட விரோதமாக குழாய்கள் அமைக்கின்றனர்.
அதிலிருந்து, பாசன நீர் திருடப்பட்டு, பல கி.மீ., துாரம் உள்ள, பாசனம் அல்லாத பகுதிகளுக்கு கொண்டு சென்று, தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்துவதாகவும், இதனால் பாசன நிலங்களுக்கு நீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியவாளவாடி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், எந்த விதமான அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக 'பைப் லைன்' அமைத்து, நீர் கொண்டு செல்லப்படுவதாக, கோவில் நிர்வாகம் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த 'பைப் லைன்'களை அதிகாரிகள் அகற்றினர்.
ஆனால், குறிப்பிட்ட சிலர் அமைத்திருந்ததை மட்டும் அதிகாரிகள் அகற்றியதாகவும், சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட, அனைத்து குழாய்களையும் அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.