பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சி, பெட்டதாபுரம் கணபதி நகரில் உள்ள கரடு, முரடான சாலையால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் பெட்டதாபுரத்தில் கணபதி நகரில் ஒற்றை அடுக்கு சாலை அமைக்கப்பட்டது.
கரடு, முரடான இச்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, கணபதி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,'இச்சாலை அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், கற்கள் நிறைந்த கரடு முரடான சாலையாகவே உள்ளது. இதை தார் சாலையாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பலமுறை தகவல் தெரிவித்து, மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை' என்றனர்.