பூந்தமல்லி:பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள மார்க்கெட், காய்கறி மற்றும் இறைச்சி வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில், முல்லாதோட்டம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்காக, வாகன நிறுத்தம் வசதிக்காக, முல்லா தோட்டம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்கியதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
பூந்தமல்லி முல்லா தோட்டம் பகுதியில், இரண்டு தலைமுறைகளாக நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை நடத்தி வருகிறோம்.
மெட்ரோ ரயில் நிலையத்தின், வாகன நிறுத்தம் இடத்திற்காக, ஏற்கனவே அருகில் உள்ள வெஸ்லி சர்ச் வளாகத்திலும், பனையாத்தம்மன் குட்டை பகுதியில் 18 ஏக்கர் நிலத்தையும், மாவட்ட நிர்வாகமும், மெட்ரோ நிர்வாகமும் தேர்வு செய்து, பணிகளும் துவங்கப்பட்டன.
தற்போது, அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டு, வியாபாரிகளின் வாழ்வாதாரமாக உள்ள முல்லா தோட்டம் கடைகளை அகற்ற உள்ளதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கடைகளை திடீரென அகற்ற சொல்வதை ஏற்க முடியாது. வாழ்வாதாரத்தை முடக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.