கோவை, : பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில், மூன்று பதக்கங்கள் வென்று மாநகராட்சி பள்ளி மாணவியர் அசத்தினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஜூடோ போட்டி காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெற்ற, 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாணவ - மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாணவியர் பிரிவில் கோவை சார்பில், பங்கேற்ற ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றனர்.
14 வயது பிரிவில் அகிலா வெள்ளி, 17 வயது பிரிவில் ஈஸ்வரி வெள்ளி மற்றும் 19 வயது பிரிவில், சபா வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளியின் தலைமை ஆசிரியை பழனியம்மாள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சரோஜா ஆகியோர் பாராட்டினர்.