கோவை : உயர் ஊட்டச்சத்து கொண்ட உணவான, சம்பா கோதுமை பயிரிடும் முறை குறித்த பயிற்சி, விவசாயிகளுக்கு வேளாண் பல்கலையில் நேற்று வழங்கப்பட்டது.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சம்பா கோதுமை, உயர் புரதம், நுண்ணுாட்ட சத்துகள், தரமான நார்ச்சத்துகள் உள்ளடங்கிய, உயர் ஊட்டச்சத்து உணவாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இதை தமிழகத்திலும் பயிரிடும் வகையில், கோதுமை மேம்பாட்டு இயக்குனரகம், வெலிங்டனில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஐ.சி.ஏ.ஆர்., கே.வி.கே.,மாநில வேளாண்மைத் துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் இணைந்து, சம்பா கோதுமை உற்பத்தி தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த, விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, வேளாண் பல்கலையில், கோதுமை பயிரிடும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இது குறித்து, வேளாண் பேராசிரியர்கள் கூறுகையில், 'பருத்தி, மக்காச்சோளம் போன்ற, பணப்பயிர்களின் தாக்கத்தால், கோதுமை பயிரிடுவது தமிழகத்தில் குறைந்து விட்டது. உடுமலை, பொள்ளாச்சி, நெகமம், நீலகிரி மலைப்பகுதிகளில், குளிர்காலத்தில் மட்டும் குறைந்த பரப்பளவே கோதுமை பயிரிடப்படுகிறது.
மலைப்பகுதியை பொருத்தவரை, நீலகிரி, கொடைக்கானல், கொல்லி மலை, தாளவாடி, சேர்வராயன் மலையோரங்கள், கோதுமை விளைவிக்க ஏற்ற பகுதிகள்.
சமவெளியை பொருத்தவரை, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களும், பயிரிட ஏற்றவை. வேளாண் பல்கலை சி.ஒ.டபிள்யூ.2 மற்றும் எச்.டபிள்யூ 1098 போன்ற சம்பா கோதுமை ரகங்களை உருவாக்கியுள்ளது' என்றனர்.