கோவை : கோவையில் உள்ள அரசு கட்டடங்களுக்கு நிர்ணயித்த சொத்து வரியை, மாநகராட்சி இன்னும் வசூலிக்காததால், ரூ.29.86 கோடி நிலுவையாக இருக்கிறது.
பொதுமக்களிடம் ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிப்பது போல், மத்திய - மாநில அரசுகளுக்கு சொந்தமான கட்டடங்களுக்கும் வரி நிர்ணயித்து, கோவை மாநகராட்சி வசூலித்து வருகிறது.
இவ்வகையில், 3,528 அரசு துறை கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்திருப்பதில், நடப்பு நிதியாண்டு ரூ.16.06 கோடி வசூலிக்க வேண்டும்; கடந்த நிதியாண்டுகளில் வசூலிக்கப்படாமல் ரூ.16.15 கோடி நிலுவையாக இருக்கிறது. மொத்தமாக, ரூ.32.21 கோடி வசூலிக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்கள், லாட்ஜ்களுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வினியோகித்து, 'கெடுபிடி' காட்டப்படுகிறது.
குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அரசு துறை கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை வசூலிக்க, வருவாய் பிரிவினர் அக்கறை காட்டாமல் இருக்கின்றனர். அதனால், இதுவரை ரூ.2.35 கோடியே வசூலாகி இருக்கிறது. இன்னும் ரூ.29.86 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது.
இதுதவிர, வரி விதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி, 147 வரி விதிப்புதாரர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இவ்வகையில், நிலுவையாக ரூ.30.23 கோடி, நடப்பு கணக்கில் ரூ.7.97 வசூலிக்கப்படாமல் இருக்கிறது.
இவ்விரு கணக்குகளில் மட்டும், 60 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தும், வரி விதிப்புதாரர்களிடம் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை வரி வசூலிக்கப்படாமல், கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை வைக்கப்பட்டிருக்கிறது. அத்தொகையை வசூலிக்க, வருவாய் பிரிவினர் அக்கறை காட்டுவதில்லை.
இத்தொகைகளை வசூலிக்க சிறப்பு கவனம் செலுத்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முனைப்பு காட்ட வேண்டும்.