கோவை : தென் கயிலாயம் என்றழைக்கப்படும், வெள்ளிங்கிரி மலையேறி சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு, அறநிலையத்துறை தடை விதித்ததற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது:
வெள்ளிங்கிரிமலை, சிவபக்தர்களால் போற்றப்படும் மிகவும் புனிதமான மலையாகும். தைப்பூசத்தில் துவங்கி ஜூன் மற்றும் ஜூலை மாதம் குரு பூர்ணிமாவரை, பக்தர்கள் மலையேறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வருவதை, நெடுங்கால வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், மலை ஏற தடை விதித்தது வனத்துறை. இந்துக்களின் பெரும் போராட்டத்திற்கு பின், தடை விலக்கப்பட்டது.
மீண்டும் எதிர் வரும் இரு மாதங்களுக்கு மலையேற தடை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை, வனத்துறை திரும்ப பெற வேண்டும்.
பக்தர்களுக்குமலையடிவாரத்தில் கழிப்பிடம், உணவு விடுதி, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சொந்தமாக கம்பு எடுத்துச்சென்றாலும், கட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாது. நுழைவு கட்டணமும் கூடாது. இதற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறையும், வனத்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு, சுப்ரமணியம் கூறியுள்ளார்.