திருத்தணி:திருத்தணி அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் ஒரு மாந்தோப்பில் இரண்டு இருளர் குடும்பத்தினர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது கொத்தடிமைகளாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து கோட்டாட்சியர் இரு குடும்பத்தினரை மீட்டார். விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்தவர்கள் கே.ஜி.கண்டிகை இருளர் காலனியைச் சேர்ந்த வேலு- அபிநாச்சி, மணி- செல்வி என, தெரிய வந்தது.
மேலும், இவர்கள், சென்னையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு சொந்தமான மாந்தோப்பில் தங்கியிருந்து கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
அதை தொடர்ந்து வருவாய் துறையினர் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து இரு குடும்பத்தினரை கொத்தடிமைகளாக வைத்திருந்த கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த ஹேமாத்திரி, 44, என்பவரை போலீசார் கைது செய்தனர்.