கோழிக்கோடு :கேரளாவில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை - திருநம்பி தம்பதிக்கு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜியா பாவல் மற்றும் ஷாஹத். இதில், ஜியா பாவல் ஆணாக பிறந்து பெண்ணாக மாற விரும்பினார். பெண்ணாக பிறந்த ஷாஹத் ஆணாக மாற விரும்பினார்.
இந்த திருநங்கை - திருநம்பி ஜோடி ஒருவரை ஒருவர் மூன்றாண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். 'ஹார்மோன்' சிகிச்சை மேற்கொண்டு தங்கள் பாலினத்தை முற்றிலுமாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் ஆசைப்பட்டனர். ஆரம்பத்தில் தத்து எடுக்க முயற்சித்தனர். அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்ததால், அவர்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக, பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சையை தற்காலிமாக கைவிட்டனர். இவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஷாஹத் கர்ப்பம் ஆனார். இது குறித்து சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாஹத்துக்கு அறுவை சிகிச்சை வாயிலாக நேற்று குழந்தை பிறந்தது.
குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். குழந்தையின் பாலினம் குறித்து இப்போதைக்கு அறிவிக்கப் போவதில்லை என்றும், குழந்தை வளரும் போது இந்த சமூகம் அறிந்து கொள்ளட்டும் என்றும், இந்த தம்பதி தெரிவித்தனர்.
தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை பெற்று தருவதாக, அரசு மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் பின், ஹார்மோன் சிகிச்சையை தொடர்வதன் வாயிலாக, குழந்தையை பிரசவித்த ஷாஹத் அதன் தந்தையாகவும், ஜியா பாவல் தாயாகவும் அதை வளர்க்க உள்ளனர்.