கோவை : கோவை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில், ரூ.860.80 கோடியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்கு, பூர்வாங்க ஆய்வு பணி துவங்கியுள்ளது.
2011ல் கோவை மாநகராட்சியோடு, 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வில்லை. குறிச்சி மற்றும் குனியமுத்துாரில் மட்டும் குடிநீர் அபிவிருத்தி திட்டம், பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், துடியலுார், வடவள்ளி, கவுண்டம்பாளையம், வீரகேரளம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.860.80 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அரசு மானியம் மற்றும் அரசு கடனாக ரூ.774.72 கோடி, மாநகராட்சி பங்களிப்பு தொகை ரூ.86.08 கோடி என அனுமதிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 'டெண்டர்' கோரப்பட்டு, துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு ஒரு பேக்கேஜ், வடவள்ளி, வீரகேரளத்துக்கு ஒரு பேக்கேஜ் என, இரு பிரிவாக செயல்படுத்தப்படுகிறது.
துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதியில் இரு இடங்களில் 'பம்ப்பிங்' ஸ்டேஷன், மூன்று இடங்களில் 'லிப்ட்டிங்' ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. மொத்தம், 42 ஆயிரத்து, 576 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.
வடவள்ளி, வீரகேரளம் பேக்கேஜில், 15 ஆயிரத்து, 570 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது; 2 இடங்களில், 'பம்ப்பிங்' ஸ்டேஷன், 7 இடங்களில் 'லிப்ட்டிங்' ஸ்டேஷன் அமைய இருக்கிறது.
எல் அண்டு டி நிறுவனத்துக்கு 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பூர்வாங்க ஆய்வு பணிகள் துவங்கியிருக்கின்றன. விரைவில் குழாய் பதிக்கும் பணி துவங்க இருக்கிறது.
குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், 'வடவள்ளி, வீரகேரளம் மற்றும் துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு, குழாய் பதிக்க ஆய்வு செய்து வருகிறோம்; விரைவில் பணி துவங்கும். இரு ஆண்டுகளுக்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்' என்றனர்.
வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, ரூ.397.20 கோடிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மதிப்பீடு தயாரித்திருக்கிறது; அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விடுபட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க ரூ.174.58 கோடிக்கு மாநகராட்சி மதிப்பீடு தயாரித்திருக்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இப்பணியை, மாநகராட்சியே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.