சோழவரம்,:சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். கொலையாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்க விசாரிக்கின்றனர்.
அசாம் மாநிலம், ஒலிவியசேரா அருகில் உள்ள கேக்கர்குல் பகுதியைச் சேர்ந்தவர் திவாரிகாபார், 25. இவர், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த, இருளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், மனைவி சுமிதாபார், 21, குழந்தைகள் சிவா, 4, ரீமா, 1, ஆகியோருடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
திவாரிகாபார் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த குட்டுலு, 25, என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். இவர், இருளிப்பட்டு அருகில் உள்ள ஜகன்னாதபுரம் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திவாரிகாபார், பணிமுடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இல்லை. அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்தபோது, நண்பர் குட்டுலு வீட்டிற்கு மனைவி சுமிதாபார் குழந்தைகளுடன் சென்றது தெரிந்தது.
அதை தொடர்ந்து திவாரிகாபார், குட்டுலு வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டிய நிலையில் இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மனைவி ரத்த காயங்களுடனும், குழந்தைகள் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் மயங்கி நிலையில் இருப்பதை கண்டார்.
இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, இரு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு, சுமிதாபார் தலையில் வெட்டு காயங்களுடனும் இருந்தனர்.
உடனடியாக சுமிதாபார் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளின் சடலங்களை போலீசார் கைப்பற்றினர்.
தகவல் அறிந்த செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன், உதவி கமிஷனர் முருகேசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குட்டுலுவிற்கும், திவாரிகாபார் மனைவிக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, சுமிதாபார், குட்டுலு வீட்டிற்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில், குழந்தைகளை கொலை செய்து, சுமிதாபாரை தலையில் கத்தியால் வெட்டிவிட்டு குட்டுலு தப்பியுள்ளார். குட்லுவை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
Advertisement