திருத்தணி:திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, மேல்திருத்தணி மற்றும் சென்னை பழைய சாலை ஆகிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது, மேல்திருத்தணி மற்றும் பழைய சென்னை சாலை ஆகிய இடங்களில், 1150 மீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், செய்து வருகின்றனர்.
மேல்திருத்தணியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த மாதம் துவக்கியது. ஆனால், இடையூறாக உள்ள, 6 மின் கம்பங்கள் மாற்றி தருவதற்கு மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
அதேபோல, பழைய சென்னை சாலையிலும், சாலைப் பணிக்கு இடையூறாக உள்ள, 27 மின் கம்பங்களை மாற்றி தருமாறும், அதற்கு உண்டான தொகையும் மின்வாரிய நிர்வாகத்திற்கு செலுத்தி உள்ளது.
மின் கம்பங்கள் மாற்றுவதற்கு மதிப்பீடு தொகை வழங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின் கம்பங்கள் மாற்றாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, மின் கம்பங்களை மாற்றி தருவதற்கு மி ன்வாரிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை விரிவாக்கத்திற்கு குறுக்காக இருக்கும், 33 மின் கம்பங்களை மாற்றித் தருமாறு ஒரு மாதம் முன் கடிதம் கொடுத்துள்ளோம்.
மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை மாற்றி தருவதற்கான திட்ட மதிப்பீடு பெறப்பட்டு அதற்காக தொகையும் செலுத்தி உள்ளோம்.
ஆனால், மின் வாரிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் சாலைப் பணிகள் தாமதம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.