கிரைம் கார்னர்
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
சிக்பல்லாப்பூர் மாவட்ட சட்ட அளவியல் துறையில், உதவி கட்டுப்பாட்டாளராக வேலை செய்பவர் மாலா கிரண், 45. இந்நிலையில் சித்லகட்டா சாலையில் உள்ள, பசவேஸ்வரா பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் ஜெயசூர்யா, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள, மீட்டர்களை புதுப்பிக்க விண்ணப்பித்தார். இதற்கு 8,௦௦௦ ரூபாய் லஞ்சமாக, மாலா கிரண் கேட்டார். லோக் ஆயுக்தா போலீசில், புகார் செய்யப்பட்டது. நேற்று மதியம், மாலா கிரணை சந்தித்த, ஜெயசூர்யா ரசாயன பவுடர் தடவிய, பணத்தை கொடுத்தார். அங்கு வந்த, லோக் ஆயுக்தா போலீசார் மாலா கிரணை கைது செய்தனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த், 25. இவருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம், ஒரு இளம்பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இருவரும், 'சாட்டிங்' செய்தனர். இதுபற்றி இளம்பெண் சகோதரர் சேத்தன், 26 என்பவருக்கு தெரிந்தது. அவர் தனது தங்கையுடன் பேச கூடாது என்று, சித்தார்த்தை எச்சரித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. நேற்று முன்தினம் அவரை, சேத்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கத்தியால் குத்தினார். சித்தார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பலாத்கார முயற்சி; இருவர் கைது
ஆந்திராவை சேர்ந்தவர் கரகிபட்டி அஜய் வெங்கட் சாய், 23. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜய், தனது தோழிகளான இருவரை இரவு விருந்துக்கு அழைத்தார். அஜய் நண்பர் ஆதித்யா அபிராஜ் என்பவரின் கோரமங்களா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் விருந்து நடந்தது. அஜய், ஆதித்யா, இரண்டு இளம்பெண்கள் மதுஅருந்தினர். குடிபோதையில் இளம்பெண்களை இருவரும் பலாத்காரம் செய்ய முயன்றனர். புகார்படி விவேக் நகர் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
மனைவியை கொன்ற கணவர்
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே, வர்த்துார் ஹலுபாவி விநாயகா ரோட்டில், வசித்து வருபவர் சஜித், 26. இவரது மனைவி மோனிஷா, 24. நான்கு வயதில் மகன் உள்ளான். நேற்று முன்தினம் சஜித்தின் வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியது.
வீடு வெளி பக்கமாக, பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த, அக்கம்பக்கத்தினர் வர்த்துார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே, சென்று பார்த்தனர். மோனிஷா உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. கழுத்தை நெரித்து கொன்று விட்டு, சஜித் தப்பி சென்றது தெரிந்தது. இக்கொலை இரு நாட்களுக்கு முன் நடந்துள்ளதாக போலீசார் கூறினர்.
உடலை புதைத்த 2 பேர் கைது
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் முகமது ரம்ஜான், 40; ரசல், 24. இவர்கள் இருவரும் பெங்களூரு சீகேஹள்ளியில், வசித்து வந்தனர். பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் தொழில் செய்தனர். இவர்களிடம் வங்கதேசத்தை சேர்ந்த ரசூல், 30 என்பவர் வேலை செய்தார்.
சம்பள பிரச்னையில், கடந்த ஜனவரி 14-ம் தேதி, ரசூல் தற்கொலை செய்தார். போலீசுக்கு தகவல் கூறாமல் உடலை, ரம்ஜானும், ரசலும் புதைத்தனர். தகவல் கசிந்து, நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 4ம் தேதி புதைக்கப்பட்ட ரசூல் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மாற்று திறனாளியை தாக்கிய திருநங்கையர்
பெங்களூரு இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மாற்று திறனாளியான வெங்கடேஷ், 22. என்பவர், தன் தாயுடன் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்ற இரு திருநங்கையர், வீடியோ காலில் வெங்கடேஷை யாரிடமோ காட்டினர்.
இதனை பார்த்த வெங்கடேஷ், திருநங்கையரிடம் தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்த திருநங்கையர், வெங்கடேஷை தாக்கிவிட்டு தப்பினர்.