சட்டசபை தேர்தலுக்காக, 'ஆப்பரேஷன் ம.ஜ.த.,'வை, முன்னாள் முதல்வர் குமாரசாமி கையில் எடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ் தலைவர்களுக்கு வலை விரித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, ம.ஜ.த., தயாராகி வருகிறது. இம்முறை கிங் மேக்கராக இல்லாமல், 123 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர திட்டம் வகுத்துள்ளது.
தற்போது பஞ்சரத்ன ரத யாத்திரை நடத்தி, மக்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில், குமாரசாமி ஈடுபட்டுள்ளார்.
மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ம.ஜ.த., விரும்பினாலும், வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே 'ஆப்பரேஷன் ம.ஜ.த.,'வை, அவர் கையில் எடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ் தலைவர்களை இழுக்க திரைமறைவில் முயற்சிக்கிறார்.
பசவ கல்யாணா தொகுதியில், பா.ஜ., சீட் எதிர்பார்க்கும் மல்லிகார்ஜுன கூபாவுடன், பேச்சு நடத்தியுள்ளார்.
இதற்கு முன் ம.ஜ.த.,வில் இருந்த அவர், 2018ல் இந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது இவரை, மீண்டும் ம.ஜ.த.,வுக்கு அழைத்து வர முயற்சி நடக்கிறது.
இதுபோன்று, பா.ஜ., காங்கிரஸ் சீட் எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவர்களை, ம.ஜ.த.,வுக்கு இழுத்து களமிறக்க திட்டமிட்டு, காய் நகர்த்துகிறார்.
-நமது நிருபர்-