பெலகாவி ரூரல் தொகுதியில், காங்கிரஸ் சீட் எதிர்ப்பார்க்கும் லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ.,வின் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு எதிராக, புதிய அஸ்திரத்தை பிரயோகித்துள்ளார்.
பெலகாவி மாவட்டத்தில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பெலகாவி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி இடையே, பலத்த போட்டி எழுந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் சவால் விடுகின்றனர்.
பல ஆண்டுகளாகவே இவர்கள் இருவர் இடையே பனிப்போர் நிலவுகிறது. பெலகாவி அரசியலில் லட்சுமி தலையிட்டதால், பிரச்னை உருவானது. இவரை கட்சி மேலிடம் கட்டுப்படுத்தாததால், அதிருப்தியடைந்த ஜார்கிஹோளி, பா.ஜ.,வில் இணைந்து, கூட்டணி அரசை கவிழ்த்தார். தற்போது எதிரெதிர் அணியில் உள்ளனர். ஒருவரை ஒருவர் காலை வாருகின்றனர்.
இம்முறை லட்சுமியை தோற்கடித்தே ஆக வேண்டும் என, ஜார்கிஹோளி உறுதி பூண்டுள்ளார். இதை உணர்ந்துள்ள லட்சுமி, அவருக்கு எதிராக அவரது சகோதரரான காங்கிரசின் சதீஷ் ஜார்கிஹோளியை அழைத்து வந்துள்ளார்.
சதீஷும், பெலகாவி ரூரல் தொகுதியை சுற்றி வந்து லட்சுமிக்கு ஆதரவாக, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தொகுதியில், பா.ஜ., காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -