பாகல்கோட் மாவட்டம், பாதாமி கெரூர் கிராமத்தில், 1955ல் பிறந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் கனரக தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். 2012 - 13ல் முதல்வராக பதவி வகித்தார்.
பாகல்கோட் மாவட்டத்தில் பிறந்து, ஹூப்பள்ளியில் அரசியல் வாழ்க்கையை துவக்கியது குறித்து, நம்மிடம் அவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
கல்லுாரி நாட்களில் மாணவர் தலைவராக இருந்தேன். படிப்பு முடிந்ததும் ஹூப்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவக்கினேன். பா.ஜ., ஹூப்பள்ளி ஊரக பிரிவு தலைவராக பணியாற்றிய போது, கட்சி அமைப்பில் ஈடுபட்டேன். ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஹூப்பள்ளி ஊரக தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியது.
முதன் முறையாக அத்தொகுதியில், 1994ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்டேன். என்னை வெற்றி பெற வைக்க எடியூரப்பாவும், அனந்த குமாரும் கடுமையாக உழைத்தனர்.
இத்தொகுதியில், ஜனதா தளத்தில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையும்; காங்கிரசில் ராஜா தேசாயும் போட்டியிட்டனர். அப்போது எனக்கும், தொகுதி மக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டது.
புதுமுகத்திற்கு வரவேற்பு
என் தந்தை எஸ்.எஸ்.ஷெட்டர், ஒருமுறை ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி மேயராக இருந்தார்.
அவரது புகழ் எனக்கு உதவியது. எனது நண்பர்கள் பணம் செலவழித்தனர். மிக குறைவான பணமே செலவானது. புதுமுகமான எனக்கு இது உதவியாக இருந்தது.
ஜனதா தளத்தின் பசவராஜ் பொம்மையை விட, 16 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தாமரையை மலர செய்தேன்.
முதல் தேர்தல் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது, அப்போதைய மத்திய தேர்தல் ஆணைய தலைமை கமிஷனரரான டி.என்.சேஷன் தான். அவரது உத்தரவின் படி, விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன.
இதை தொடர்ந்து, நடந்த ஆறு பொது தேர்தல்களில், எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த பலரும், பா.ஜ.,வில் இணைந்து உள்ளனர்.
இந்த தொகுதி மக்கள், பணத்துக்கு விலை போனதில்லை. எனக்கு எதிராக போட்டியிட்டவர்களை, தரம் தாழ்ந்து பேசியதில்லை.
தேர்தலில் பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்து கட்சியினரும்; வாக்காளர்களும் ஓட்டுகளை விற்க மாட்டோம் எனவும் உறுதி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
.
- நமது நிருபர் -